Thursday, July 2, 2009

சிறு பெண்ணே...




சிறு பெண்ணே...


பிரசவத்தின் உச்சிப்பொழுதில் ....
பிரவாகமெடுத்த உன் அழுகை சத்தம்
"அப்பா நான் வந்துவிட்டேன்!" என்று
எனை அழைத்தது போன்றதொரு மயக்கம்....

அப்புறமாய் ....
பஞ்சுத் துணியில் பொதிந்தபடி,
பத்திரமாய் பாட்டி கொண்டுவர.
மொட்டுவிழி அவிழ்த்தாய் நீ!
சுற்றி நின்ற முகத்தையெல்லாம்
திக்கி... திக்கிப் பார்த்தபடி ...
திடீரென்று என்னையும் பார்த்துவிட்டாய் !
அப்புறமாய்....
எப்பக்கமும் திரும்பவில்லை உன் விழிகள்!
யார் சொன்னார் உன்னிடம் ....
இவர்தான் அப்பா என்று?

இறுகிய உன் கைகளை
மெல்ல....மெல்ல அவிழ்த்துவிட்டால்...
பட்டென்று மீண்டும் சுருக்கி கொள்வாய்!
பின்னொருநாள்...
இரு கைகளையும் அலைபோல் அடித்து
அகப்பட்ட என் விரலை பற்றிக் கொண்டாய்!
அப்போது அறிந்தேன்..
அது கை பற்றுதல் அல்ல;
கைப்பற்றுதல் என்று!

விழுவது போல் நடப்பாய்....பயமின்றி !
விழும் இடம் அப்பா மடிதான் என்று....
அப்படியொரு நம்பிக்கை உனக்கு!

இன்றோ....
அவளும் நானும் பிரிந்தோம்
அது விதி - அதற்காய்
நீயும்....நானும் பிரிந்தது எப்படி சரி?

அன்று.....
இருவர் கரம் பற்றி
இடையில் நீ நடப்பாய்!
இன்று...
நீ பற்ற ஒரு பக்கம் கரமில்லை - ஆனாலும்
நீயொன்றும் விழமாட்டாய்

தாங்க ஒரு கரம் உண்டு!
மகிழ்ந்திடு!
தவிப்போடு ஏங்கும் ஒரு கரமும் உண்டு
மறந்திடாதே.....மகளே!

3 comments:

ஆர்வா said...

//அது கை பற்றுதல் அல்ல;
கைப்பற்றுதல் என்று! //
சார்.. Excellent Lines....

ரொம்ப அழகான கவிதை..
அந்தக் கவிதையில வர்ணனையை தாண்டி ஒரு வலி இருக்கு....
"இதுவும் கடந்து போகும்"
தொடர்ந்து எழுதுங்க. உங்க எழுத்துக்களுக்காக காத்துகிட்டு இருக்கோம்.

தமிழ் காதலன் said...

மிகவும் அருமையாய் இருந்தது .,தொடரட்டும் உங்கள் படைப்புகள் .

கலையரசன் said...

அருமைங்க.. அரும!!

Post a Comment