Monday, July 13, 2009

ஆதாமும் ஆப்பிள் பழமும்























கதைகளுக்கெல்லாம்
ஒரு தாய் கதை உண்டு
உலகில்
அதுவே ஆதாம் கதை!

பழத்தினில் கேடு
வருவது உண்டு;
பழமே கேடாய்
வந்த கதை அது!

"ஆதாம்!
அனைத்தையும் எடு;
அக்கனியை
மட்டும் விடு"
கடவுள் சொன்னார்

அக்கனி...
பொற்கனி போன்றதொரு
அக்னி!

அம்மரதருகே
கரியதொரு பாம்பு!
அடிக்கடி
அம்மரத்தை சுற்றும்...
ஒரு நாள்...அவன்
மனத்தை சுற்றியது.
பிறகு
புத்தகம் போல்
அம்மரத்தைப்
பிரித்தது... பாம்பு!

ஆதாமை கேட்டது
"தப்பேது கண்டாய்...
தித்திப்பான இப்பழத்தில்"

"கூடாதேமே....
கடவுள் சொன்னார்"

கூடாதென்றால்
படைத்தது ஏன்?
கேட்டிட மாட்டாய்...
அறிவிலியே"?

இலைகளின் அசைவில்
கிளைகளின் ஆட்டத்தில்
பிழையாய் பார்த்தபடி
நெளிந்தது பாம்பு!

"வனத்தின் பழங்களை
உண்பவனே! - இது
வானத்தின் பழம்!
இன்னும் கேள்...
ஞானத்தின் பழம்!
இது கடவுள் ஆக்கிய
பழமோ?
அல்ல...அல்ல..
உன்பவரைக்
கடவுள் ஆக்கும் பழம்
அறிவாயோ?
ஆதலின்
இப்பழ்தை உண்டிடு...
உண்டபின்
வானத்தின் கூரை
மீது நின்றிடு..
நீயொரு கடவுள்"
சிரித்தது பாம்பு.

ஆதாம் பார்த்தான்
அவன் கண்களில்
அக்கனி ஆடியது
ஏவாள் பார்த்தாள்..
அக்கனியே..அவள்
கண்களாய் மாறியது.

பறித்தார்கள்...
சிவந்த பழம் அது...
கடித்தார்கள்....
உதடுகளில் வழிந்தது
கருப்பு நிறசசாறு!

பூமியே புரண்டது
இடிகள் தாவின...
தரையில் உருண்டன
சூறைக் காற்றில்
ஏதேன் வளைந்தது!
மின்னல்கள் தெறித்தன
மேனியில் சில
சன்னல்கள் திறந்தன..
பிறந்த மேனி
அன்று
திறந்த மேனியாய்...
அடடா!
கண்கள் கூசிற்று!
"ஏய்...நிர்வாணி!"
அறிவு வாய் திறந்தது

ஓடினார்கள்...
ஓடி...ஓடி
இழைத்த பொழுதில
இரவு விழுந்தது

விடியலில்
தந்திர பாம்பு...
மந்திர பழம்...
சுந்தர வனம்...என
தூரத்தே ஏதேன்!

வெட்டவெளியில்
பூமியின்
வெறுமையை தொலைத்தபடி
இருவர்....
ஆதாம்...ஏவாள்!

ஆதாம் கதையது
பழத்தின் கதையல்ல;
பழம் போல்..பாவம்
பழுத்திட்ட கதை.


Thursday, July 2, 2009

சிறு பெண்ணே...




சிறு பெண்ணே...


பிரசவத்தின் உச்சிப்பொழுதில் ....
பிரவாகமெடுத்த உன் அழுகை சத்தம்
"அப்பா நான் வந்துவிட்டேன்!" என்று
எனை அழைத்தது போன்றதொரு மயக்கம்....

அப்புறமாய் ....
பஞ்சுத் துணியில் பொதிந்தபடி,
பத்திரமாய் பாட்டி கொண்டுவர.
மொட்டுவிழி அவிழ்த்தாய் நீ!
சுற்றி நின்ற முகத்தையெல்லாம்
திக்கி... திக்கிப் பார்த்தபடி ...
திடீரென்று என்னையும் பார்த்துவிட்டாய் !
அப்புறமாய்....
எப்பக்கமும் திரும்பவில்லை உன் விழிகள்!
யார் சொன்னார் உன்னிடம் ....
இவர்தான் அப்பா என்று?

இறுகிய உன் கைகளை
மெல்ல....மெல்ல அவிழ்த்துவிட்டால்...
பட்டென்று மீண்டும் சுருக்கி கொள்வாய்!
பின்னொருநாள்...
இரு கைகளையும் அலைபோல் அடித்து
அகப்பட்ட என் விரலை பற்றிக் கொண்டாய்!
அப்போது அறிந்தேன்..
அது கை பற்றுதல் அல்ல;
கைப்பற்றுதல் என்று!

விழுவது போல் நடப்பாய்....பயமின்றி !
விழும் இடம் அப்பா மடிதான் என்று....
அப்படியொரு நம்பிக்கை உனக்கு!

இன்றோ....
அவளும் நானும் பிரிந்தோம்
அது விதி - அதற்காய்
நீயும்....நானும் பிரிந்தது எப்படி சரி?

அன்று.....
இருவர் கரம் பற்றி
இடையில் நீ நடப்பாய்!
இன்று...
நீ பற்ற ஒரு பக்கம் கரமில்லை - ஆனாலும்
நீயொன்றும் விழமாட்டாய்

தாங்க ஒரு கரம் உண்டு!
மகிழ்ந்திடு!
தவிப்போடு ஏங்கும் ஒரு கரமும் உண்டு
மறந்திடாதே.....மகளே!